செய்திகள்
ஜிம்பாப்வே

ஒரே நேரத்தில் இரட்டை நோய் தாக்குதலில் சிக்கிய ஜிம்பாப்வே

Published On 2020-04-24 10:36 GMT   |   Update On 2020-04-24 10:36 GMT
ஜிம்பாப்வே நாட்டை ஒரே நேரத்தில் மலேரியாவும், கொரோனாவும் தாக்கி வருகின்றன.
ஹராரே:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே கடந்த 10 ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

சுமார் 1.50 கோடி மக்கள் தொகை ஜிம்பாப்வேயில் தற்போது மலேரியா நோய் வேகமாக பரவி வருகிறது. வழக்கமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மலேரியா அந்நாட்டை ஒரு கை பார்க்கும். சில ஆண்டுகள் இதன் தாக்கம் சற்று குறைவாகவும் காணப்படும்.

இந்த வருடத்தில் இதுவரை, (அதாவது கடந்த 3 மாதங்களில்) இந்நோய்க்கு 153 பேர் பலியாகி விட்டனர். மேலும் 1.35 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மலேரியாவால் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் வேறு ஜிம்பாப்வேயை அச்சுறுத்த தொடங்கி இருக்கிறது. அங்கு தற்போதுவரை கொரோனா அதிகமாக பரவவில்லை. இனி வேகமாக பரவலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதுவரை கொரோனாவால் ஜிம்பாப்வேயில் 28 பேர் பாதிக்கப்பட்டும் 3 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

முன்னதாக, உலக சுகாதார நிறுவனம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து அதிபர் எமர்சன் மாங்காக்வா தனது நாட்டில் மார்ச் மாத இறுதியில் 3 வார கால ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருந்தார்.

கடந்த 19-ந் தேதி முதல் மேலும் 2 வாரத்துக்கு ஊரடங்கை அவர் நீட்டித்து உள்ளார். இதன் காரணமாக ஒரு கோடி மக்கள் வேலையை இழந்து வருமானமின்றி பட்டினி கிடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இதனால் அதிக உயிர்ப்பலி வாங்கப்போவது வறுமையா? மலேரியாவா? கொரோனாவா? என்ற அச்சத்தில் ஜிம்பாப்வே மக்கள் உறைந்துபோய் உள்ளனர்.

ஜிம்பாப்வே மக்கள் நிலைமை பரிதாபம்தான்!
Tags:    

Similar News