செய்திகள்
வளர்ப்பு பூனைகள் (கோப்பு படம்)

அமெரிக்காவில் முதல் முறையாக வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-04-23 03:23 GMT   |   Update On 2020-04-23 03:23 GMT
கொரோனாவால் அதிக இழப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில் முதல் முறையாக வளர்ப்பு பூனைகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளையும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இதனையடுத்து வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை பராமரிப்பதிலும், மருத்துவ பரிசோதனை செய்வதிலும் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் அமெரிக்காவில் முதல் முறையாக செல்லப்பிராணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள இரண்டு வீடுகளில் வளர்க்கப்படும் இரண்டு பூனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

பூனைகளுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் விரைவில் குணமடையும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆனால் அந்த வீடுகளில் உள்ளவர்களில் யாருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனினும் செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்கு இந்த செய்தி அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. 

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் நிலவரப்படி நியூயார்க்கில்  2 லட்சத்து 58 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 302 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News