செய்திகள்
விமானப்படை தளம் மீது ராக்கெட் குண்டு வீச்சு (கோப்புப்படம்)

ஈராக்கில் விமானப்படை தளம் மீது ராக்கெட் குண்டு வீச்சு - 3 அமெரிக்க, இங்கிலாந்து வீரர்கள் பலி

Published On 2020-03-12 20:34 GMT   |   Update On 2020-03-12 20:34 GMT
ஈராக்கில் விமானப்படை தளம் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டதில் அமெரிக்க படை வீரர்கள் 2 பேரும், இங்கிலாந்து ராணுவ வீரர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பாக்தாத்:

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு களத்தில் உள்ளன. இதில் அமெரிக்க படை வீரர்களை குறிவைத்து அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஈராக்கில் அமெரிக்க படைகள் மீதான தாக்குதல் அதிகமாகி உள்ளது.

இந்த நிலையில் பாக்தாத்தின் வடக்கு பகுதியில் நேட்டோ படை வீரர்கள் முகாமிட்டிருந்த தாஜி விமானப்படை தளத்தின் மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. அடுத்தடுத்து 18 ராக்கெட் குண்டுகள் விமானப்படை தளத்தில் விழுந்து வெடித்து சிதறின.

இதில் அமெரிக்க படை வீரர்கள் 2 பேரும், இங்கிலாந்து ராணுவ வீரர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 12 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை அமெரிக்க ராணுவமும், இங்கிலாந்து ராணுவமும் உறுதிப்படுத்தி உள்ளன.

அதே சமயம் இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்களே இந்த தாக்குதலை நடத்தியிருக்கும் என நம்பப்படுகிறது.

முன்னதாக ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக கடந்த ஜனவரி 8-ந்தேதி ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு மூளை காயங்கள் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News