செய்திகள்
பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் படையினர்

துருக்கியில் பனிச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு

Published On 2020-02-06 05:46 GMT   |   Update On 2020-02-06 05:46 GMT
துருக்கியில் பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் பணியாளர்கள் 33 பேர், அடுத்து ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
அங்காரா:

துருக்கி நாட்டில் தற்போது கடும்குளிர் நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் அடிக்கடி பனிச்சரிவுகள் ஏற்படுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் வான் மாகாணத்தில் உள்ள பாசெசேஹிர் மாவட்டத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. 

இதையடுத்து தகவலறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். ஒரு சில தன்னார்வலர்களும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். பனிச்சரிவில் சிக்கிய 8 பேரை மீட்புப்படையினர் உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 54 பேர் காயமடைந்தனர். மேலும் பலர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இரண்டாவதாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த 33 வீரர்கள் உயிரிழந்ததாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. 

‘இரண்டாவதாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மீட்புப்பணியாளர்கள் 33 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் எட்டு இராணுவ போலிஸ் அதிகாரிகள், அரசால் நியமிக்கப்பட்ட மூன்று கிராம காவலர்கள், மூன்று தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒன்பது தன்னார்வலர்கள் அடங்குவர். பனியின் கீழ் சிக்கியுள்ள மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது’ என துருக்கியின் அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதுவரை மொத்தம் மீட்புப்படை வீரர்கள் உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எத்தனை பேர் காணாமல் போயிருக்கலாம் என்ற புள்ளிவிவரத்தை அரசு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News