செய்திகள்
டொனால்ட் டிரம்ப்

இந்தியாவில் நடந்த தாக்குதல்களிலும் ஈரான் படைத்தலைவருக்கு பங்கு - டிரம்ப் திடுக்கிடும் தகவல்

Published On 2020-01-05 00:50 GMT   |   Update On 2020-01-05 00:50 GMT
அமெரிக்காவில் கொல்லப்பட்ட சுலைமானிக்கு, இந்தியாவில் நடந்த தாக்குதல்களிலும் பங்கு உண்டு என்ற திடுக்கிடும் தகவலை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதலில் ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானி கொல்லப்பட்டது, உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நியாயப்படுத்தி உள்ளார்.

இதையொட்டி நேற்று அவர் புளோரிடா மாகாணம், மார் எ லாகோ விடுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபத்தில் ஈராக்கில் அமெரிக்க இலக்குகளை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்கள் நடந்தன. இதில் ஒரு அமெரிக்கர் பலியானார். 4 படைவீரர்கள் படுகாயம் அடைந்தனர். பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வன்முறை தாக்குதல் நடந்தது. இதெல்லாம், சுலைமானி உத்தரவிட்டு நடந்ததுதான்.

சுலைமானி, அப்பாவி மக்களை கொன்று குவித்தார். இந்தியாவிலும், உலகமெங்கும் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் சதியிலும் அவருக்கு பங்கு உண்டு.

இன்றைய தினம் சுலைமானியின் அட்டூழியத்தில் பலியானவர்களை நாம் நினைக்கிறோம். மதிக்கிறோம். அவரது பயங்கரவாதம் முடிவுக்கு வந்து விட்டது என்பதை அறிந்து நிம்மதி பிறந்துள்ளது.

அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலை, நீண்ட காலத்துக்கு முன்பே நடத்தி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

சமீபத்தில் ஈரானில் அந்த நாட்டின் சொந்த மக்கள் 1000 பேர், போராட்டங்களின்போது சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர். இதற்கு தலைமை தாங்கியவர் இதே சுலைமானிதான்.

இந்த நடவடிக்கையை நாங்கள் எடுக்க காரணம், போரை தடுத்து நிறுத்தத்தான். ஒரு போரைத் தொடங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஈரான் மக்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர்கள் வளமான பாரம்பரியமும், கட்டுக்கடங்காத ஆற்றலும் கொண்டவர்கள். நாங்கள் அங்கு ஆட்சி மாற்றத்தை நாட வில்லை.

இருப்பினும் அந்த பிராந்தியத்தில் ஈரானின் ஆக்கிரமிப்பு, அண்டைநாடுகளை சீர்குலைக்க மறைமுக போராளிகளை பயன்படுத்தல் போன்றவை இப்போது முடிவுக்கு வர வேண்டும்.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.

இதற்கு இடையே ஈரான் படைத்தலைவர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது; தங்கம் விலையும் ஏறி வருகிறது.
Tags:    

Similar News