செய்திகள்
தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள்

சிரியாவில் அரசுப் படைகள் வான்வழி தாக்குதல்- 23 பேர் பலி

Published On 2019-12-18 03:39 GMT   |   Update On 2019-12-18 03:39 GMT
சிரியாவில் போராளிக் குழுக்களின் கடைசி கோட்டையாக விளங்கும் பகுதியில் அரசுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
பெய்ரூட்:

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச்சில் இருந்து கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில்  இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வேறு இடங்களை தேடி தஞ்சம் புகுந்தனர்.

சிரியாவின் இத்லிப் பகுதியில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய போராளி குழுக்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எனினும், இந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வருவோம் என சிரிய அரசு தொடர்ந்து உறுதி கூறி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இப்பகுதியில் கடந்த ஏப்ரலில் நடந்த அரசு ஆதரவு படைகளின் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலை அடுத்து 4 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் தங்களது வீடுகளை விட்டு விட்டு இடம் பெயர்ந்து சென்றனர்.

அரசு படைகளின் தாக்குதலை தவிர்க்கும் வகையில் ரஷ்யா கடந்த ஆகஸ்டு இறுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கு பின்னரும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதில் 250 பேர் வரை பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், பிரிட்டனை அடிப்படையாக கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள செய்தியில், அரசு படைகள் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் 23 பேர் பலியாகி உள்ளனர்.  30 பேர் காயமடைந்தனர் என தெரிவித்து உள்ளது. போராளிக் குழுக்களின் கடைசி கோட்டையாக கருதப்படும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News