செய்திகள்
கோழிக்குஞ்சுகள்

இந்தோனேசியாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கிய அரசு

Published On 2019-11-27 07:55 GMT   |   Update On 2019-11-27 07:55 GMT
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாண அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கியுள்ளது.
ஜகார்த்தா:

இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பமும் நாகரீகமும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து கோலோச்சியுள்ளன. அதிலும் அலைபேசி எனும் செல்போனின் வளர்ச்சி மிக உச்சத்தில் உள்ளது. சாதாரண தகவல் தொலைத்தொடர்பு சாதனமாக அறிமுகமான செல்போன் இன்று சகலத்தையும் சாதிக்க வல்லதாக உள்ளது. இன்று ஸ்மார்ட் போன் இல்லாத இளைஞர்களே இல்லை எனலாம். 

ஸ்மார்ட் போன்களில் உள்ள கம்ப்யூட்டர் கேம்களால் பள்ளி செல்லும் குழந்தைகளும் அதற்கு அடிமையாகி உள்ளனர். நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம் மலையேறி மொபைலை காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிலைமைக்கு வந்துவிட்டோம் என்றே சொல்லலாம். டிக்டாக் போன்ற செயலிகளில் குழந்தைகள் பேசுவதும், நடனம் ஆடும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகின்றன. அந்த அளவிற்கு குழந்தைகளிடையேயும் மொபைல் மோகம் தொற்றிக்கொண்டது. 

இந்நிலையில், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாண அரசு ஸ்மார்ட் போன்களுக்கு குழந்தைகள் அடிமையாவதை தவிர்க்கும் புதிய முயற்சியாக பள்ளிக்குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கியுள்ளது.

மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பாண்டங் நகரில் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் சுமார் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நகர மேயர் டேனியல் கூறுகையில், ‘இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகள் கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவர். இணையதளம் மற்றும் மொபைல் கேம்களில் இருந்து விலகி இருப்பர். குஞ்சுகளை வளர்ப்பது மாணவர்களுக்கு மதிப்புமிக்க திறன்களை கற்பிக்கும் மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கும். கோழிக்குஞ்சுகளை நன்கு வளர்க்கும் குழந்தைகளுக்கு பரிசும் வழங்கப்படும்’, என கூறினார்.
Tags:    

Similar News