செய்திகள்
சிலி நாட்டில் நடைபெற்ற கலவரம்

சிலி நாட்டில் கலவரம்- 23 பேர் பலி

Published On 2019-11-23 06:58 GMT   |   Update On 2019-11-23 06:58 GMT
தென் அமெரிக்க நாடான சிலியில் கடந்த 5 வாரங்களாக நடைபெறும் கலவரத்தில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். 2 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.
சாண்டியாகோ:

தென் அமெரிக்க நாடான சிலியில் கடந்த 5 வாரங்களாக தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிறது. நாட்டில் குறிப்பிட்ட சில குடும்பத்தினர் மட்டும் வசதியான வாழ்க்கை வாழ்வதாகவும், அனைவருக்கும் சமூக, பொருளாதார நிலையில் சமநிலை இல்லை என்றும் குற்றம் சாட்டுப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையை போக்க அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி கடந்த அக்டோபர் 18-ந்தேதி முதல் அங்குள்ள முக்கிய நகரங்களில் கலவரம் நடைபெற்று வருகிறது.

தலைநகரம் சாண்டியாகோ, பியூன்டே அல்டோ, அன்டோ பகாஸ்டா வால் பாரிசோ, வினா டெல் மார் உள்ளிட்ட நகரங்களில் தீவைப்பு, கொள்ளை, கல் வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

கலவரத்தை அடக்குவதில் ராணுவமும், போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவத்தில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். 2 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிதறிய குண்டுகளின் துகள்கள் பட்டதில் 280 பேரின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். அமைதி காக்க வேண்டும் என சிலி நாட்டின் அதிபர் செபஸ்டியன் பினேரா கோரிக்கை விடுத்துள்ளார். கலவரத்தில் ஈடுபட்ட 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News