செய்திகள்
ஆசியான் உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள்

தாய்லாந்து பிரதமர், இந்தோனேசியா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

Published On 2019-11-03 07:35 GMT   |   Update On 2019-11-03 07:35 GMT
இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பாங்காக் வந்துள்ள பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பிரதமர் மற்றும் இந்தோனேசியா அதிபருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பாங்காக்:

இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று தொடங்கியது. மேலும், 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3-வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது.

இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.

நேற்று பிற்பகல் பாங்காக் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேரியட் மார்கிஸ் ஹோட்டலுக்கு வந்த அவரை தாய்லாந்தில் வாழும் இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயத்தையும் நேற்றிரவு பிரதமர் மோடி வெளியிட்டார்.



இன்று காலை தொடங்கிய  இந்தியா-ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார்.

முன்னதாக, தாய்லாந்தில் உள்ள ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் 50-வது ஆண்டுவிழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய அவர்,  தாய்லாந்து பிரதமர் சான்-ஓ-சா மற்றும் இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இந்தியாவுடனான பல்வேறுதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
Tags:    

Similar News