செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட ஷுரி கோட்டை

ஜப்பானில் உலக பாரம்பரிய சின்னமான ஷுரி கோட்டையில் தீ விபத்து

Published On 2019-10-31 10:18 GMT   |   Update On 2019-10-31 10:18 GMT
ஜப்பானில் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட ஷுரி கோட்டையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
டோக்கியோ:

ஜப்பானின் பிரதான நிலப்பகுதிக்கும் தைவானுக்கும் இடையில் கிழக்கு சீனக் கடலில் அமைந்துள்ளது ஓகிவானா மாகாணம். இது 150 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டது. புகழ்பெற்ற அரண்மனைகளும், அருங்காட்சியகங்களும் அப்பகுதியில் உள்ளன.

அங்கு 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ஷுரி கோட்டை உள்ளது. 1429 முதல் 1800 ம் ஆண்டுகளில் இருந்த ரியுக்யு பேரரசின் கோட்டையாக இருந்தது. பின்பு இது அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டது. இது கடந்த 2000ம் ஆண்டு யுனெஸ்கோவால் பழமை வாய்ந்த புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2.40 மணியளவில் கோட்டையில் திடீரென தீப்பிடித்தது. செய்வதறியாது திகைத்த அங்கிருந்த ஊழியர்கள் மீட்புப்படையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  தீ அதிக அளவில் பரவியதால் அருகில் வசித்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். கோட்டையின் பெரும்பகுதிகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

தீ எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உலக பாரம்பரிய சின்னமான ஷுரி கோட்டையில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓகினாவா தீவில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கடேனா என்ற கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 30 அமெரிக்க ராணுவ தளங்களும் இங்கு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News