செய்திகள்
பயோனா நகரில் உள்ள மசூதி

பிரான்சில் மசூதியை எரிக்க முயன்ற 84 வயது நபர் கைது

Published On 2019-10-29 07:22 GMT   |   Update On 2019-10-29 07:22 GMT
பிரான்ஸ் நாட்டில் மசூதியை எரிக்க முயன்ற வலதுசாரி கட்சியை சேர்ந்த முன்னாள் வேட்பாளரை போலீசார் கைது செய்தனர்.
பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ளது பயோன் நகரம். அப்பகுதியில் உள்ள மசூதிக்கு நேற்று மதியம் 84 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வந்துள்ளார். சுற்றும் முற்றும் பார்த்த அந்த நபர் மசூதியை தீ வைத்து எரிக்க முயன்றுள்ளார். இதைக் கண்ட உடன் அருகிலிருந்த இருவர் அவரை தடுப்பதற்காக ஓடி வந்தனர். 

இதையடுத்து அந்த நபர் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த காவல்துறையினர் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறிது நேரத்தில், பயோன் நகரில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள செயிண்ட்-மார்ட்டின்-டி-சீக்னான்க்ஸ் நகரில், அந்த நபரை கைது செய்தனர். 

விசாரணையில். அவர் பெயர் கிளாட் சின்க், 2015 பிராந்திய தேர்தலில் தேசிய முன்னனி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் என தெரியவந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஒப்புக்கொண்ட கிளாட் சின்க் 3 ராணுவ ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததையும் ஒப்புக்கொண்டார்.

இம்மாத தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டில் போலீஸ் அலுவலகத்திற்குள் நான்கு அதிகாரிகள் மர்மநபரால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். அந்த மர்மநபர் தடை செய்யப்பட்ட சில பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர் என பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதையடுத்து பிரிவினைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பவேண்டும் என பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரான் அந்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் இவ்வாறு கூறிய சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News