செய்திகள்
ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் தலைவன் பக்தாதி

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவன் கொல்லப்பட்டான் - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

Published On 2019-10-27 18:01 GMT   |   Update On 2019-10-27 18:01 GMT
உலக நாடுகளை அச்சுருத்திவந்த ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் தலைவன் பக்தாதி சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவந்த பயங்கரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ (சிரியா மற்றும் ஈராக்கில் நாடு கடந்த இஸ்லாமிய ஆட்சி) என்பதன் சுருக்கம் ஆகும்.

ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும்.

இதன் முதல்கட்டமாக, மூன்றாண்டுகளுக்கு முன்னர் சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டிவிட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.

இந்த ஆட்சியின் மன்னனாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி தன்னை 29-6-2014 அன்று பிரகடணப்படுத்தி கொண்டான்.

ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பு தெரிவித்த பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவர்களை கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். மேலும் அழகிய இளம்பெண்களை கடத்திச் சென்று தங்களது பாலியல் தேவைக்கும் பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

மோசூல் நகரில் ஒரு தலைமையிடத்தை ஆட்சிபீடமாக அமைத்து தங்களது அமைப்பின் பெயரை ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) என்று சுருக்கி கொண்டனர். இதனையடுத்து, அமெரிக்க விமானப்படை துணையுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளை தங்கள் நாட்டில் இருந்து ஒழித்துக்கட்ட ஈராக் அரசு தீர்மானித்தது.

இதனால், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் அமெரிக்கா மாற்றும் ஈராக் படைகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இந்த போரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து ரஷிய படைகளும் வான்வழி தாக்குதல்களை அவ்வப்போது நடத்தினர்.

மோசூல் நகர் அரசுப்படைகளால் கைப்பற்றப்பட்டதையடுத்து அங்கிருந்து தப்பிடோடிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியா மற்றும் ஈராக் நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள பாலவனங்களில் தலைமறைவாக பதுங்கினர். ரஷியா, ஈராக் போன்ற நாடுகள் நடத்திய வான்வழி தாக்குதல்களில் ஐ.எஸ். இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக பல முறை ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆனால், அவை எல்லாம் உறுதிப்படுத்த முடியாத தகவல்களாகவே அமைந்திருந்தன.



இந்நிலையில்,  ஐ.எஸ்.இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிம் கூறியதாவது:-

எனது தலைமையின் கீழ் அமைக்க சிறப்பு அதிரடி படை வீரர்கள் இன்று அதிகாலை சிரியாவின் இட்லிப் பகுதியில் உள்ள அபுபக்கர் அல்-பக்தாதி பதுங்கியிருந்த இடத்தில் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பக்தாதியின் வீட்டில் இருந்த அவனது 11 குழந்தைகள் மீட்கப்பட்டனர். ஆனால் பக்தாதி அங்கிருந்த தனது 3 குழந்தைகளை பதுங்குக்குழிக்குள் இழுத்துச்சென்றான். 

சிறப்புப்படையினர் கொண்டுவந்த மோப்பநாய்கள் துரத்தியதால் அவன் அழுதுகொண்டும், அலறிகொண்டும் பதுங்குக்குழியின் முடிவுக்கு சென்றுவிட்டான். சரணடைவது அல்லது சுட்டுக்கொல்லப்படவது ஆகிய இரண்டு வாய்ப்புகள் இருந்த நிலையில் பக்தாதி தனது இடுப்பில் கெட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்தான். இதில் பக்தாதி மற்றும் அவனது மூன்று குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்தனர். உடனடியாக ரத்தப்பரிசோதனை எடுக்கப்பட்டு உயிரிழந்தது பக்தாதி தான் என உறுதி படுத்தப்பட்டது.

சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் பக்தாதின் இரண்டு மனைவிகள் உள்பட ஐ.எஸ். பயங்கரவாதிகள் பல கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையில் அமெரிக்க வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை.

இந்த நிகழ்வுகளை நான் எனது சக அதிகாரிகளுடன் வெள்ளைமாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு திரைப்படத்தை காண்பது போன்று தெளிவாக கவனித்துக்கொண்டிந்தோம்.

மிக மிகஆபத்தான இந்த வேலையை சரியாக செய்துமுடிக்க எங்களுக்கு உறுதுணையாக இருந்த ரஷியா, துருக்கி, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கும் சிரியாவில் உள்ள குர்திஷ் மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உலகம் இனி அமைதியாக இருக்கும்.

என அவர் கூறினார். 
Tags:    

Similar News