செய்திகள்
சிங்கம்

பாகிஸ்தானில் கூலி கேட்ட தொழிலாளியை சிங்கத்தை ஏவி கடிக்க விட்ட கொடூரம்

Published On 2019-10-16 21:43 GMT   |   Update On 2019-10-16 21:43 GMT
பாகிஸ்தானில் கூலி கேட்ட தொழிலாளி மீது தான் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த சிங்கத்தை ஏவிவிட்ட கொடூரம் நடந்துள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் உள்ள ‌ஷாக்தாரா மாவட்டத்தை சேர்ந்த அலி ராசா என்பவர், மத கூட்டங்கள் நடத்தும் மண்டபம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

அண்மையில் இந்த மண்டபத்தில் மின் வினியோகத்தில் பழுது ஏற்பட்டது. அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் முகமது ரக்பி இதனை சரிசெய்து கொடுத்தார். ஆனால் அதற்கான கூலியை கொடுக்காமல் அலி ராசா அவரை ஏமாற்றி வந்தார்.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த முகமது ரக்பி, அலி ராசாவின் வீட்டுக்கு சென்று வேலைபார்த்ததற்கான கூலியை உடனே தரும்படி கூறி தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த அலி ராசா, தான் செல்லப்பிராணியாக வளர்த்து வரும் சிங்கத்தை முகமது ரக்பி மீது ஏவிவிட்டார்.

அப்போது முகமது ரக்பியின் முகம் மற்றும் கையை சிங்கம் கடித்து குதறியது. இதில் அவர் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சிங்கத்திடம் இருந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அலி ராசா மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News