செய்திகள்
வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

ஜப்பானில் புயல் ருத்ரதாண்டவம் - 25 பேர் பலி

Published On 2019-10-13 20:17 GMT   |   Update On 2019-10-14 02:48 GMT
ஜப்பான் நாட்டில் ‘ஹகிபிஸ்’ புயல் ருத்ர தாண்டவமாடியது. 25 பேர் பலியாகினர். மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
டோக்கியோ:

பசிபிக் பெருங்கடலில் ஒரு புயல் உருவாகி, அதற்கு ‘ஹகிபிஸ்’ என பெயரிடப்பட்டது. இந்த புயல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருந்தபோதே பலத்த மழை பெய்யத்தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஈஸூ தீபகற்ப பகுதியில் கரையைக் கடந்தது.

இதன்காரணமாக அங்கு கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை வெளுத்துக்கட்டியது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடுதான்.

டோக்கியோ, மிய், ஷிசுவோகா, குன்மா, சிபா உள்ளிட்ட 7 பிராந்தியங்களை சேர்ந்த 42 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். 14 ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. தாழ்வான பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.



இந்தப் புயலும், பெருமழையும் கிழக்கு ஜப்பானில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. 14 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.

ருத்ர தாண்டவமாடிய ஹகிபிஸ் புயல், மழையையொட்டி நடந்த சம்பவங்களில் 25 பேர் பலியாகினர்.

12-க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர்.

நிலச்சரிவால்தான் பலரும் பலியானதாக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறினர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள், பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகள் பற்றி அரசு செய்தி தொடர்பாளர் யோஷிஹைட் சாகோ கூறுகையில், “ஹகிபிஸ் புயலால் கிழக்கு ஜப்பான் இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த சேதத்தை அடைந்துள்ளது. 27 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மற்ற மீட்புக்குழுவினரும் களப்பணியில் உள்ளனர். வெள்ள பகுதியில் படகுகளும், ஹெலிகாப்டர்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன” என்றார்.

ஆளும் கட்சி அரசியல் தலைவர் புர்னியோ கிஷிடோ, “மீட்புப்பணிகளை பொறுத்தமட்டில் அரசாங்கம் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்யும். நாமும் நம்மால் இயன்றதை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

ரக்பி உலக கோப்பை போட்டியில் நமீபியா, கனடாவுக்கும் இடையே நேற்று நடக்க இருந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஜப்பான் வானிலை அமைப்பு யாசுஷி கஜிவாரா, “பெருநகரங்களிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. அதனால்தான் முன் எச்சரிக்கை விடப்பட்டது” என கூறியது.

சரியான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால்தான் இந்தப் புயலில் உயிர்ச்சேதங்கள் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News