செய்திகள்
தடையை மீறி முகமூடிகளுடன் போராடும் மக்கள்

முகமூடிகளுக்கு எதிரான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு - ஹாங்காங்கில் வலுக்கும் போராட்டம்

Published On 2019-10-06 13:49 GMT   |   Update On 2019-10-06 13:49 GMT
ஹாங்காங்கில் முகமூடிகளுக்கு எதிராக அரசு விதித்த தடை சட்டத்தை நீக்க நீதிமன்றம் மறுத்து விட்டதால் தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டம் இன்று பல பகுதிகளில் வன்முறையாக மாறியது.
ஹாங்காங்:

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மசோதா கைவிடப்பட்டது. ஆனாலும், ஹாங்காங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என கூறி நான்கு மாதங்களக போராட்டம் நடைபெற்றுவருகிறது.
 
இதற்கிடையில், சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் கடந்த 1-10-2019 அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அதேவேளையில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. பல்லாயிரக்கணக்கானோர் முகமூடி அணிந்து கொண்டு சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது.



ஹாங்காங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்துதல், சுதந்திரமாக தேர்தல், போராட்டக்காரர்களை தாக்கிய போலீசார் மீது விசாரணை மேற்கொள்ளுதல், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போராட்டக்காரர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது.

போலீசார் தங்கள் அடையாளங்களை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு போராடி வருகின்றனர். இப்படி முகமூடிகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கையை ஹாங்காங் அரசு அறிவித்தது.



முகமூடிகளை அணிவது சட்ட விரோதம் என்ற அவசர சட்டம் தொடர்பான அறிவிப்பால் போராட்டக்காரர்களின் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து ஹாங்காங் நீதிமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டதால் ஹாங்காங் முழுவதும் பல வன்முறை சம்பங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனால் ரெயில்கள், பஸ்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தனியார் விற்பனை கூடங்கள் அடித்து, நொறுக்கி சூறையாடப்பட்டன. பல பகுதிகளில் வாகனங்கள், கடைகள் எரிக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
Tags:    

Similar News