செய்திகள்
13-ம் நூற்றாண்டில் இத்தாலிய ஓவியரான சிமாய்பூ என்பவரால் வரையப்பட்ட ஓவியம்

சமையலறையில் கிடந்த ஓவியத்தின் மதிப்பு ரூ.47 கோடி - இன்ப அதிர்ச்சியில் மூதாட்டி

Published On 2019-09-25 20:39 GMT   |   Update On 2019-09-25 20:39 GMT
சமையலறையில் இருந்த ஓவியத்தை ஆய்வு செய்த போது அதன் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.47 கோடி என்பதை கேட்ட மூதாட்டி இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.
பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான காம்பிக்னே நகரை சேர்ந்த 90 வயது மூதாட்டி 1960-ம் ஆண்டில் கட்டப்பட்ட தனது பழமையான வீட்டை விற்க முடிவு செய்தார். இதையடுத்து அந்த நகரில் உள்ள ஏல நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் மூதாட்டியின் வீட்டுக்கு சென்று, அங்கு உள்ள அலங்கார பொருட்கள் மற்றும் மரச்சாமான்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

அப்போது வீட்டில் உள்ள சமையலறையில் எரிவாயு அடுப்புக்கு மேலே பழமையான ஓவியம் ஒன்று தொங்க விடப்பட்டிருந்ததை கண்டனர். அது பற்றி மூதாட்டியிடம் கேட்டபோது அந்த ஓவியம் குறித்து எதுவும் தெரியாது என்றும், வேறு இடம் இல்லாததால் சமையலறையில் தொங்க விட்டதாகவும் கூறினார்.

இதையடுத்து, அந்த ஓவியத்தை எடுத்து ஆய்வு செய்தபோது அது 13-ம் நூற்றாண்டில் இத்தாலிய ஓவியரான சிமாய்பூ என்பவரால் வரையப்பட்டது என்று தெரியவந்தது. மேலும் அந்த ஓவியத்தின் மதிப்பு 6 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.47 கோடி) இருக்கும் என்று அதை ஆய்வு செய்தவர்கள் கூறினர். இதை கேட்டு அந்த மூதாட்டி இன்ப அதிர்ச்சியில் உறைந்தார். இதையடுத்து அந்த ஓவியத்தை அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி ஏலத்தில் விற்பனை செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.
Tags:    

Similar News