செய்திகள்
நிலச்சரிவில் உடைந்து கிடக்கும் சாலை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம்: 20 பேர் பலி

Published On 2019-09-24 17:41 GMT   |   Update On 2019-09-24 17:41 GMT
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான மீர்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. 

மக்கள் வசித்து வந்த வீடுகள், வணிகவளாகங்கள் மற்றும் வழிபாட்டுத்தளங்கள் என பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. சாலைகளின் இரண்டாக பிளந்து அதில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து நொறுங்கின.இதில் பெண் உள்பட இரண்டு பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.



இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பல வீடுகள் விழுந்து தரைமட்டமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம், பேரிடர் மீட்பு படையினர் என பல்வேறு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News