செய்திகள்
தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித்

அமைதி பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்ட அமெரிக்கா விரைவில் வருத்தப்படும் - தலிபான் மிரட்டல்

Published On 2019-09-10 09:11 GMT   |   Update On 2019-09-10 10:10 GMT
அமைதிக்கான பேச்சுவார்த்தை செத்துப் போனதாக டிரம்ப் குறிப்பிட்ட நிலையில் இதற்காக அமெரிக்கா விரைவில் வருத்தப்படும் என தலிபான் பயங்கரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான்வழியாக சென்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் தலைவர்களுக்கிடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. அமெரிக்க அரசும் ஒருபுறம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில்  ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி மற்றும் தலிபான் தலைவர்களுடன் தனித்தனியாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால், கடந்த 5-ம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்களில் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதன் எதிரொலியாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி மற்றும் தலிபான் தலைவர்களுடன் தனித்தனியாக நடத்தவிருந்த ரகசிய பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.



இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவுகளில் ‘அவர்கள் (தலிபான்கள்) முக்கியமான இந்த அமைதி பேச்சுவார்த்தை காலத்தில்கூட போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அர்த்தமுள்ள எந்த உடன்படிக்கைக்கும் அவர்கள் தயாராக இல்லை என்பது புரிகிறது. எனவே, சமாதான பேச்சுவார்த்தையை நான் உடனடியாக ரத்து செய்து விட்டேன். அமைதி பேச்சுவார்த்தைகள் செத்துப்போய் விட்டன’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்,  இதற்காக அமெரிக்கா விரைவில் வருத்தப்படும் என தலிபான் பயங்கரவாத இயக்கம் இன்று மிரட்டல் விடுத்துள்ளது.

’ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்க எங்களுக்கு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று ஜிஹாத் எனப்படும் புனிதப் போர்முறையை கையாள்வது, மற்றொன்று அமைதி பேச்சுவார்த்தை.
அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்திவிட டிரம்ப் தீர்மானித்தால், நாங்கள் முதல் வழியை தேர்வு செய்வோம். இதற்காக அவர்கள் விரைவில் வருத்தப்படுவார்கள்’ என தலிபான் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News