செய்திகள்
இத்தாலி கடற்கரை

சுற்றுலா வந்த நினைவாக கடற்கரை மணலை எடுத்துச் சென்றதால் இருவருக்கு சிறை

Published On 2019-08-21 05:41 GMT   |   Update On 2019-08-21 05:41 GMT
இத்தாலி நாட்டில் கடற்கரை மணலை சுற்றுலா வந்ததன் நினைவாக எடுத்துச் சென்றதற்காக, 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரோம்:

தெற்கு ஐரோப்பாவின் இத்தாலி, மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன.

எனவே, இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பஞ்சமில்லை. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர். இங்குள்ள கடற்கரைகளில் இயற்கையின் அழகை ரசித்த வண்ணம் சுற்றுலா பயணிகள் தங்கள் பொழுதை கழிப்பார்கள்.

அப்படி 2 சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரையில் பொழுதை கழித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பும்போது  பாட்டில்களில் கடற்கரை மணலை, வந்து சென்றதன் நினைவாக எடுத்துச் செல்ல நிரப்பியுள்ளனர்.



இதன் எடை சுமார் 40 கிலோ ஆகும். இதற்காக 2 பேரும் கைது செய்யப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இருவரும் இச்சட்டம் குறித்து எதுவும் தெரியாது எனவும், சாதாரணமாக நினைவாகக் கொண்டு செல்லத்தான் நினைத்ததாகவும் கூறினார்.

இத்தாலியில் கடந்த 2017ம் ஆண்டு கடற்கரைகளை சுற்றுலா பயணிகள் சுகாதாரமான முறையில் பயன்படுத்துவதில்லை எனவும், அங்குள்ள அரியப் பொருட்களை சேதப்படுத்துகின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து அங்குள்ள கடற்கரைகளில் மணல், கூழாங்கற்கள் மற்றும் கடற்பாசிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்வது சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் சார்டினியன் கடற்கரையில் மணல் எடுத்ததற்காக  2 சுற்றுலா பயணிகளும் கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் ஓராண்டு முதல் 6 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.



Tags:    

Similar News