செய்திகள்
லெகிமா புயல் பாதிப்பு பகுதியில் மீட்பு பணிகள் நடைபெறும் காட்சி

சீனாவை தாக்கிய லெகிமா புயல்- பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு

Published On 2019-08-13 06:28 GMT   |   Update On 2019-08-13 06:28 GMT
சீனாவின் மூன்று மாகாணங்களில் கோரத் தாண்டவம் ஆடிய லெகிமா புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
பீஜிங்:

சீனாவின் செஜியாங் மாகாணத்தை கடந்த சனிக்கிழமை லெகிமா புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 190 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்த சூறாவளியால் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. அதன்பின்னர் ஷாங்டாங், அன்ஹூய் ஆகிய மாகாணங்களையும் லெகிமா புயல் தாக்கியது. 

புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையன்று புயல் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் சிலரைத் தேடி வந்தனர்.



அதன்பின்னர் இரண்டு நாட்களாக நடந்த மீட்பு பணியின்போது மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டன. இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 21 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த இயற்கை பேரிடரால் சுமார் 26 பில்லியன் யுவான் (3.7 பில்லியன் டாலர்) அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News