செய்திகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

மெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டும் அமெரிக்க அதிபரின் திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

Published On 2019-07-27 15:43 GMT   |   Update On 2019-07-27 15:43 GMT
ராணுவ செலவினத்துக்கான நிதியை பயன்படுத்தி அமெரிக்காவின் தெற்கு எல்லையில் மெக்சிகோ நாட்டுக்கு இடையில் மதில் சுவர் கட்டும் அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
வாஷிங்டன்: 

மெக்சிகோ நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாக கூறப்படுகிறது. இதைத் தடுப்பதற்காக ஏற்கனவே அங்கு 670 மைல் தொலைவுக்கு பல பகுதிகளிலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு நாட்டு எல்லைப் பகுதியில் 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு மிகப்பெரிய தடுப்புச்சுவர் கட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டொனால்டு டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று, ஜனாதிபதி பதவியை ஏற்றுள்ள நிலையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். சுமார் 670 கோடி டாலர்கள் அளவிலான இந்த திட்டத்துக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒப்புதல் அளிக்கவில்லை.

அதுமட்டுமின்றி, ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து இந்த மதில் சுவருக்கான கட்டுமானச் செலவு மேற்கொள்வதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இவ்வவகாரத்தை முன்வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து சுமார் ஒருமாத காலத்துக்கு அமெரிக்க அரசின் செலவினங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படாமல் அரசு ஸ்தம்பித்துப் போகும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், மெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டும் டிரம்ப்பின் இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு முறையீட்டு வழக்கில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகானுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 250 கோடி டாலர்களை பயன்படுத்தி நாட்டின் தெற்கு பகுதியில் மெக்சிகோ எல்லையையொட்டி மதில்சுவர் கட்ட டிரம்ப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

5 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு ஆதரவாக 4 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இந்த தீர்ப்பை வரவேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

‘கீழமை நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளதால், எல்லை சுவர் விவகாரத்தில் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பி நாட்டில் நிலவும் சட்டத்தின் ஆட்சிக்கும், எல்லை பாதுகாப்பு படைக்கும் கிடைத்த வெற்றியாகும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News