செய்திகள்
போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

Published On 2019-07-23 11:29 GMT   |   Update On 2019-07-23 17:28 GMT
இங்கிலாந்தின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லண்டன்:

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.

இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது. 

இதில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவுத்துறை மந்திரி ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.



கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் ஓட்டுகள் தான் கட்சியின் புதிய தலைவரை தீர்மானித்தன.

உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குச்சீட்டுகளில் யாருக்கு வாக்கு அளிக்கிறோம் என்பதை குறிப்பிட்டு, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு திருப்பி அனுப்பினர். வாக்குச்சீட்டுகளை திருப்பி அனுப்புவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.

இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டன. அதன்படி, இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News