செய்திகள்

லண்டன் போக்குவரத்து துறைக்கு இந்தியா ரூ.55 கோடி கடன் பாக்கி

Published On 2019-06-08 16:00 GMT   |   Update On 2019-06-08 16:00 GMT
லண்டன் போக்குவரத்து துறைக்கு இந்திய தூதரகம் செலுத்த வேண்டிய ரூ.55 கோடி நெரிசல் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளது.
லண்டன்:

லண்டனில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்காக 2003ம் ஆண்டு முதல் நெரிசல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நெரிசல் கட்டணமானது 1961ல் தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டில் உருவாக்கப்பட்டதாகும். 

இந்த திட்டத்தால் கனரக வாகனங்கள் மாற்று வழியில் பயணம் செய்யவேண்டும். இதனால் நெரிசல் குறையும். போக்குவரத்து நெரிசல் கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ள சாலைகளில் பேட்டரி வாகனங்கள், குறைவான புகையை வெளிப்படுத்தும் சிறிய வகை வாகனங்கள் இலவசமாக செல்லலாம். 

அதிக புகையை வெளியிடும் கனரக வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்கள் இந்த சாலையின் வழியாக சென்றால் நெரிசல் கட்டணமாக 11.50 யுரோக்கள் (ரூ.1016) செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அபராத தொகையாக 160 யுரோக்கள் (ரூ.14140) செலுத்த வேண்டும். செலுத்தவில்லை எனில் கண்காணிப்பு காமிராக்களின் மூலம் வாகனத்தை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வகையில், லண்டன் போக்குவரத்து துறைக்கு நெரிசல் கட்டணம் செலுத்த வேண்டிய கடன் பட்டியலில் இந்திய தூதரகம் 4வது இடத்தில் உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

புள்ளிவிவரங்களின் படி, போக்குவரத்து நெரிசல் கட்டண தொகை பாக்கி வைத்துள்ள நாடுகளில் அமெரிக்கா (ரூ.110 கோடி) முதலிடத்திலும்,  ஜப்பான் (ரூ.76 கோடி), நைஜீரியா (ரூ.63 கோடி) முறையே அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.  இந்த அபராத தொகையை வசூலிப்பதற்காக, ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தை போக்குவரத்து துறை நாட உள்ளது. இந்தியா ரூ.55 கோடி செலுத்த வேண்டி உள்ளது.

இதுபற்றி லண்டன் போக்குவரத்து துறையின் பொதுமேலாளர் பால் கவ்பெர்வைத்ட் கூறுகையில், “இது வரி அல்ல, சேவைக்கட்டணம் ஆகும். எனவே வெளியுறவு தூதரகங்கள் வரி செலுத்தாமல் இருக்க இயலாது. மேலும் செலுத்தாத அனைத்து கட்டணங்களையும் கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

இந்த திட்டம் மும்பை, புதுடெல்லி போன்ற மாநகரங்களில் செயல்படுத்த பரிசீலிக்கப்பட்டு இந்திய அரசால் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News