செய்திகள்

சூடானில் முடிவுக்கு வருகிறது ராணுவ ஆட்சி- 9 மாதங்களில் தேர்தல் நடத்த அறிவிப்பு

Published On 2019-06-04 09:41 GMT   |   Update On 2019-06-04 09:41 GMT
சூடான் நாட்டில் சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 9 மாதங்களில் தேர்தல் நடத்தி புதிய அரசு அமைக்கப்படும் என ராணுவம் அறிவித்துள்ளது.
கர்த்தூம்:

சூடான் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம்  தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இடைக்கால ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, 3 ஆண்டுகளுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக எதிர்க்கட்சி கூட்டணியுடன் ராணுவம் ஒப்பந்தம் செய்தது.

எனினும் சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கர்த்தூமில் நேற்று ராணுவ தலைமையகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில், 35 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.



இவ்வாறு மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தையை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாகவும், இன்னும் 9 மாதங்களில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் லெப்டினன்ட் ஜெனரல் அப்தெல் பத்தா அல் பர்கான் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News