செய்திகள்

சீனாவில் மனித உரிமை செயல்பாட்டாளருக்கு 4 ஆண்டு சிறை

Published On 2019-01-28 10:58 GMT   |   Update On 2019-01-28 11:40 GMT
சீன அரசை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டின்கீழ் அந்நாட்டின் மனித உரிமை செயல்பாட்டாளராக திகழ்ந்த வழக்கறிஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Chinesehumanrightslawyer #humanrightslawyer #WangQuanzhang
பீஜிங்:

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்த பலரை அந்நாட்டு அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்கள்மீது ஆட்சியை கவிழ்க்க சதிச்செயலில் ஈடுபட்டது உள்பட பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

அவ்வகையில், சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டியான்ஜின் பகுதியில் கைதான மனித உரிமை செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான வாங் குவாங்ஸாங் என்பவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



அவரை விடுதலை செய்யகோரி வாங் குவாங்ஸாங்-கின் மனைவி சமூகவலைத்தளம் மூலம் பிரச்சார இயக்கங்களை நடத்தி வந்தார்.

சீனா தலைநகர் பீஜிங்கில் இருந்து மொட்டை அடித்த தலையுடன் தனது கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டியான்ஜின் நகருக்கு பேரணியாக சென்றார். எனினும், அவரது கோரிக்கைகள் அரசால் ஏற்கப்படவில்லை.

இந்நிலையில், டியான்ஜின் நகர இரண்டாவது நீதிமன்றத்தில் வாங் குவாங்ஸாங் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், தண்டனைக்காலம் முடிந்து அடுத்த ஐந்தாண்டுகள்வரை அவர் தேர்தல்களில் வாக்களிக்கவும், போட்டியிடவும், பொது மேடைகளில் பேசவும், எழுதவும், அரசுப்பணிகளில் சேரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனைக்கு சீனாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Chinesehumanrightslawyer #humanrightslawyer #WangQuanzhang
Tags:    

Similar News