செய்திகள்

லண்டன் கோவிலில் 3 கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை

Published On 2018-11-12 05:47 GMT   |   Update On 2018-11-12 05:47 GMT
லண்டனில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் இருந்த 3 கிருஷ்ணர் சிலைகள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #SwaminarayanTemple
லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடக்கு பகுதியில் சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. கடந்த 1975-ம் ஆண்டில் இந்த கோவிலில் வழிபாடு தொடங்கியது. லண்டனில் வாழும் இந்துக்கள் இக்கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இந்த கோவிலில் இருந்த 3 கிருஷ்ணர் சிலைகள் திடீரென மாயமாகிவிட்டன. அவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் பணம் மற்றும் சில பொருட்களும் திருடப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. ஸ்காட்லாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவின் வீடியோ பதிவு மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை முடிந்த சில மணிநேரங்களில் இந்த சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அவை பித்தளையால் செய்யப்பட்டவை.

ஆனால் அவை தங்கத்தினால் செய்யப்பட்டவை என தவறாக கருதி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. உண்மையை அறிந்து அந்த சிலைகளை கொள்ளையர்கள் மீண்டும் கொண்டு வந்து வைத்து விடுவார்கள் என நம்புவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கோவிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை போனதால் பக்தர்கள் மிகவும் மனவருத்தத்தில் உள்ளனர். #SwaminarayanTemple
Tags:    

Similar News