செய்திகள்

அடர்ந்த காட்டுக்குள் 3 நாள் தவித்த 2 வயது குழந்தை

Published On 2018-08-16 07:21 GMT   |   Update On 2018-08-16 07:21 GMT
ஜப்பானில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் தண்ணீரை மட்டும் குடித்து 3 நாளாக தவித்த 2 வயது குழந்தையை சமூக ஆர்வலர் மீட்டார். #YoshikiFujimoto #westernJapan
டோக்கியோ:

ஜப்பானில் உள்ள யமாகுச்சி பிராந்தியத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்குள்ள காட்டு பகுதிக்கு சென்றார்.

அங்கு சுற்றிப்பார்த்து கொண்டிருந்தபோது 2 வயது பேரக்குழந்தையான யோஷிகி புஜிமோட்டோ காணாமல் போய்விட்டான். அவனை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தேடினார்கள். 3 நாட்கள் ஆகியும் குழந்தையை கண்டு பிடிக்கவில்லை.

இந்த நிலையில் 78 வயது சமூக ஆர்வலர் ஒருவர் அந்த குழந்தை காட்டுக்குள் இருப்பதை கண்டுபிடித்தார். அருகில் தண்ணீர் குட்டை ஒன்று இருக்க அதன் அருகில் உள்ள பாறையில் அந்த குழந்தை அமர்ந்திருந்தது. குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

அந்த குழந்தை 3 நாட்களும் அருகில் இருந்த குட்டையில் தண்ணீரை குடித்து உயிர்வாழ்ந்துள்ளது. ஜப்பானில் தற்போது கடுமையான வெயில் தாக்கம் உள்ளது. இந்த நிலையிலும் காட்டுக்குள் தாக்குபிடித்து 3 நாட்களாக இருந்துள்ளான்.

வெயில் காரணமாக அவனது உடலில் நீர்சத்து குறைந்து இருந்தது. காட்டுக்குள் சுற்றி திரிந்ததால் ஆங்காங்கே அவனது உடலில் கீறல்கள் ஏற்பட்டு இருந்தன. அவனை மீட்டது குறித்து சமூக ஆர்வலர் கூறியதாவது:-

நான் காட்டுக்குள் சென்று கொண்டிருந்தபோது ஒரு பாறையில் யாரோ ஒரு குழந்தை அமர்ந்து இருப்பது போல் தெரிந்தது. இந்த பகுதியில் மனிதர்கள் யாரும் நடமாடுவது இல்லை. எனவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அருகில் சென்று பார்த்தபோது அது குழந்தை என்று தெரிந்தது. அதை பார்த்ததும் என் இதயமே நின்றுவிடுவது போல் இருந்தது. உடனே நான் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #YoshikiFujimoto #westernJapan
Tags:    

Similar News