செய்திகள்

ஊழல் ஒழிப்பு குறித்து இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்க வேண்டும் - ஷெபாஸ் ஷெரீப்

Published On 2018-07-12 14:31 GMT   |   Update On 2018-07-12 14:31 GMT
ஊழல் வழக்கில் நரசிம்ம ராவ், ஜெயலலிதா மீது இந்தியாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எனவே ஊழல் ஒழிப்பு குறித்து இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்க வேண்டும் என நவாஸ் ஷெரீப் தம்பி ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத் :

பணாமா லீக்ஸ் விவகாரத்தில் தண்டிக்கப்பட்டு பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷெரீப் தற்போது அவ்வழக்கில் மேல்முறையீட்டு விசாரணையை சந்தித்து வருகிறார்.

லண்டன் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பில் 4 வீடுகளை அவர் ஊழல் செய்த பணத்தில் வாங்கினார் எனும் வழக்கில் ஷெரிப் மீதான குற்றாச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், அவரது மகள் மர்யம் நவாஸ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது லண்டனில் உள்ள நாவாஸ் மற்றும் அவர்து மகள் இருவரும் மீண்டும் பாகிஸ்தான் திரும்பும் பட்சத்தில் அவர்கள் மீது கைது நடவடிக்கைகள் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷெபாஸ் ஷெரீப் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்க்ளிடம் அவர் கூறியதாவது :-

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியின் நிர்வாகிகள் சுமார் 300 பேர் செவ்வாய் அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு 30 நாள் சிறைக்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விடுதலை ஆவதற்குள் வரும் 25-ம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் பொதுத்தேர்தலே முடிந்து விடும்.

நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்குகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை ஆகும். அவர் மீதான வழக்குகளுக்கு ஆதாரம் இல்லை என நீதிமன்றமே தெரிவித்திருந்தது. இந்நிலையில், லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பும் அவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

என்ன ஆனாலும் நாளை நாவஸ் மற்றும் அவரது மகள் இருவரும் பாகிஸ்தான் வந்தடைவார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க அவர்கள் தயாராக உள்ளனர்.



தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய கூடாது என எங்கள் கட்சிக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால், இம்ரான் கான் பிரச்சாரம் செய்ய மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் தற்போது பொம்மை ஆட்சி நடைபெற்று வருவது உறுதியாகிறது.

இந்தியா பல்வேறு துறைகளில் பாகிஸ்தானை விட முன்னேறிய நாடாக விளங்குகிறது. நம்மை விட பின் தங்கிய நிலையில் இருந்த இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகள் எல்லாம் வளர்ச்சியில் நம்மை பின்னுக்கு தள்ளிவிட்டன.

இந்தியாவில் ஊழல் செய்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் அதன் மாநில முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மீது துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் ஊழல் செய்தவர்கள் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். அடுத்த தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ஊழலை ஒழிப்பதில் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்க வேண்டும்.

பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது, பங்கு பரிவர்த்தனைகள் குறைந்துவிட்டது, நமது நாட்டின் கையிருப்பை வைத்து நம்மால் ஒரு மாதம் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். பாகிஸ்தானில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் இப்போது வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News