செய்திகள்

குடியேறும் ஆசையுடன் அமெரிக்காவுக்கு சென்ற 50 இந்தியர்கள் சிறையில் அடைப்பு

Published On 2018-06-20 11:16 GMT   |   Update On 2018-06-20 11:16 GMT
டிரம்ப்பின் புதிய எல்லை கொள்கையால் அமெரிக்காவில் குடியேறும் ஆசையுடன் இந்தியாவில் இருந்து சென்ற ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் அங்குள்ள ஆரேகான் மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒருமாத காலத்தில் தெற்காசியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் ஆசையுடன் சென்ற 123 பேர் அங்குள்ள ஆரேகான் மாநிலத்தில் உள்ள ஷெரிடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களில் 50 பேர் இந்தியர்கள் என்றும் பெரும்பாலானவர்கள் இந்தி மற்றும் பஞ்சாபி மொழி பேசுவதாகவும், சிலர் மட்டும் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் குறுகிய தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை யாரும் சந்தித்து சட்ட உதவிகளை அளிக்கவும் அதிகாரிகள் தடை செய்துள்ளதாக ஆரேகான் இந்தியா பசிபிக் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  #Indianasylumseekers  #asylumseekersdetainedinUS
Tags:    

Similar News