செய்திகள்

இங்கிலாந்தில் 100 நோயாளிகளை கொன்ற பெண் டாக்டர்

Published On 2018-06-18 06:24 GMT   |   Update On 2018-06-18 06:24 GMT
இங்கிலாந்தில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு பெண் டாக்டர் தான் காரணம் என விசாரணை குழு குற்றம் சாட்டியுள்ளது. #JaneBarton
லண்டன்:

இங்கிலாந்தில் ஹான்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் டாக்டர் ஜேன் பார்டன் (69). இவர் அங்குள்ள காஸ்போர்ட் போர் நினைவு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்தார்.

இவரது கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நர்சு போட்ட ஊசி மருந்துக்கு பின்னர் மரணம் அடைந்தார்.

முன்னதாக உடல் வலி குறித்து தான் டாக்டரிடம் கூறவில்லை என்றும், ஆனால் உடல் வலி போக்கும் ஊசி மருந்தை செலுத்தியதாகவும் அந்த நோயாளி தனது புகாரில் கூறியிருந்தார்.

அதை தொடர்ந்து வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. அதில் வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு மரணம் விளைவிக்கும் அளவுக்கு தேவைக்கு அதிகமான வலி போக்கும் மருந்தை டாக்டர் ஜேன் பார்டன் பரிந்துரைத்து இருந்தது தெரிய வந்தது.

நோயாளிகளுக்கு “டயாசி பாம்” என்ற மருந்துக்கு பதிலாக டாக்டர் பார்டன் பரிந்துரையின் பேரில் “டயாமார்பின்” என்ற மருந்தை நர்சுகள் அளவுக்கு அதிகமாக அளித்துள்ளனர். அது வி‌ஷமாக மாறி நோயாளிகளின் உயிரை பறித்துள்ளது.

இந்த மருந்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் ஆதாரங்கள் சிக்காததால் 1998-ம் ஆண்டு விசாரணையை போலீசார் கை விட்டனர்.

டாக்டராக செயல்பட பார்டனுக்கு தகுதி உள்ளதா? என 2001-ம் ஆண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் தொழில் முறையில் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. அதையடுத்து 2007-ம் ஆண்டு அவர் பணி ஓய்வு பெற்றார்.

தற்போதைய விசாரணை குழு டாக்டர் ஜேன் பார்டன் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளது. #JaneBarton
Tags:    

Similar News