செய்திகள்
கோப்பு படம்

இலங்கையில் நான்காவது முறையாக மந்திரிசபையில் மாற்றம் - 6 பேர் பதவி ஏற்றனர்

Published On 2018-05-01 12:35 GMT   |   Update On 2018-05-01 12:37 GMT
உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, நம்பிக்கை இல்லா தீர்மானம், அணிமாறி வாக்களித்தது, பாராளுமன்றம் முடக்கம் போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண இலங்கை மந்திரிசபையில் இன்று மாற்றம் செய்யப்பட்டது.#PresidentSirisena #Cabinet
கொழும்பு:

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் இணைந்து ஒற்றுமை அரசை அமைத்து இருந்தன.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் புதிய கட்சி பெருவாரியான இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இதனால் இலங்கை அரசில் புயல் வீசத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு பிரதமர் மறுத்துவிட்டார். இதனால் அரசில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பிரதமருக்கு எதிராக ராஜபக்சே ஆதரவு பெற்ற கூட்டு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தை முறியடித்து பிரதமர் வெற்றி பெற்றார்.

இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது அதிபர் சிறிசேனாவின் கட்சியை சேர்ந்த 6 மந்திரிகள் உள்ளிட்ட சில எம்.பி.க்கள் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக வாக்களித்தனர். எனவே, இந்த மந்திரிகளை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி அதிபரை வலியுறுத்தியது.

அதன்படி, அணிமாறி வாக்களித்த 6 மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு பதிலாக 12-4-2018 அன்று பொறுப்பு மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த பரபரப்பான சூழலில் அரசியல் சட்டம் 70-வது பிரிவின்கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா தற்காலிகமாக முடக்கி வைத்தார்.

இதன்தொடர்ச்சியாக, நான்காவது முறையாக மந்திரிசபையில் மாற்றம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் முடிவுக்கு அதிபர் ஒப்புதல் அளித்தார். இன்று புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். சிலரது இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் நீதித்துறை மந்திரி விஜயதாஸா ராஜபக்‌ஷே இன்று உயர்கல்வித்துறை மற்றும் கலாச்சார விவகாரங்கள் துறை மந்திரியாக பதவி ஏற்றார்.

உயர்கல்வித்துறை முன்னாள் மந்திரி நெடுஞ்சாலை மற்றும் சாலைகள் மேம்பாட்டுத்துறை மந்திரியாக பதவி ஏற்றார். தலத்தா அத்துக்கோரலா நீதித்துறை மற்றும் சிறைத்துறை சீரமைப்பு மந்திரியாக பதவி ஏற்றார்.

பிராந்திய மேம்பாட்டுத்துறை மந்திரியாக இருந்த முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா நீடித்த வளர்ச்சி மற்றும் வனத்துறை மந்திரியாக பதவி ஏற்றார்.

மீன்வளத்துறை மந்திரியாக இருந்த ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரா வேளாண்மைத்துறை மந்திரியாக பதவி ஏற்றனர்.

இன்றைய மந்திரிசபை விரிவாக்கத்தில் 6 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். 18 பேரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. #PresidentSirisena #Cabinet
Tags:    

Similar News