செய்திகள்

மோடி - ஜின்பிங் சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக அமையும்: சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து

Published On 2018-04-24 01:09 GMT   |   Update On 2018-04-24 01:09 GMT
மோடி-ஜின்பிங் சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக அமையும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
பீஜிங்:

பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி அண்டை நாடான சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு 2 நாட்கள் தங்கியிருக்கும் அவர் சீன அதிபர் ஜின்பிங்கையும் சந்தித்து பேசுகிறார். மத்திய சீனாவில் உள்ள வுகன் நகரில் இந்த சந்திப்பு நடக்கிறது.

இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லூ காங் நிருபர்களிடம் கூறுகையில், “இரு தலைவர்களும்(ஜின்பிங்-மோடி) சந்தித்து பேசுவது ஆக்கப்பூர்வமானதாக அமையும். மேலும் இரு நாடுகளின் உறவில் நீண்ட காலமாக உள்ள பிரச்சினைகள் குறித்து பேசுவது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். இந்த மாற்றம் இப்பிராந்தியத்தில் மட்டுமின்றி உலகிலும் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்துவதாகவும் அமையும்” என்று குறிப்பிட்டார்.

எதன் அடிப்படையில் இந்த சந்திப்பு நடக்கிறது என்ற கேள்விக்கு லூ காங் பதில் அளித்து கூறியதாவது:-

உலக மயமாக்கல் கொள்கை ஏற்கப்பட்ட பின்னர், சமீப காலமாக இந்த உலகம் பரவலாக ஒரு தலைப்பட்சமான சுய பாதுகாப்புவாத பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. இதை நாம் உன்னிப்பாக கவனித்து அதுபற்றி விவாதிக்கவேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

மேலும் நமது நாடுகள் உலக பொருளாதார சந்தையில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் அதிக மக்கள் தொகையை கொண்டவை. எனவே நம்மால் உலக மயமாக்கல் கொள்கையை மிகுந்த உள்ளடக்கம் கொண்டதாக தாங்கி பிடிக்க இயலும். மேலும் நமது நலன்கள், கவலைகள், நிலைகள் பற்றி நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டி உள்ளது.

வுகன் நகரில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது, கருத்துகளை பரிமாறிக் கொள்வது நீண்டகாலமாக தீர்க்கப்படவேண்டிய விஷயங்களுக்கு தீர்வு காண்பதாகவும் மற்றும் உலகம் ஸ்திரத்தன்மையுடன் வளர்ச்சி பெற உதவுவதாகவும் அமையும். இரு தலைவர்களும் வுகன் நகரில் சந்திப்பதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் எதுவும் இல்லை.



இவ்வாறு அவர் கூறினார்.

மோடி, ஜின்பிங்கின் சந்திப்பு வர்த்தக துறையில் அமெரிக்காவின் சுய பாதுகாப்புவாதத்துக்கு எதிரானதா? என்ற கேள்விக்கு, நிச்சயமாக இது தொடர்பாக இரு தலைவர்களின் உரத்த குரலை இந்த உலகம் கேட்கும் என்றார்.

இதற்கிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளச்சென்ற மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், சீன அதிபர் ஷின்பிங்கை நேற்று பீஜிங் நகரில் சந்தித்து பேசினார். 
Tags:    

Similar News