செய்திகள்

ராணி இரண்டாம் எலிசபெத் விருப்பப்படி காமன்வெல்த் அமைப்பின் தலைவர் ஆகிறார் சார்லஸ்

Published On 2018-04-21 22:21 GMT   |   Update On 2018-04-21 22:21 GMT
ராணி இரண்டாம் எலிசபெத் விருப்பப்படி காமன்வெல்த் அமைப்பின் அடுத்த தலைவராக இளவரசர் சார்லஸ்சை ஏற்பது என முடிவு செய்யப்பட்டது.
லண்டன்:

காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இருந்து வருகிறார்.

வயது முதிர்ந்தநிலையில், அவர் தனது இடத்துக்கு மகனும், இளவரசருமான சார்லஸ் வர வேண்டும், அது தனது மனமார்ந்த விருப்பம் என்று கூறி இருந்தார். அதற்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் முதலில் ஆதரவு தெரிவித்தனர்.

காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பதவி, பரம்பரையாக ஒரு குடும்பத்துக்கு சொந்தம் கிடையாது. எனவே ராணி மறைந்தாலும் கூட, தானாக இந்தப் பதவி இளவரசர் சார்லஸ்சை வந்து அடைய முடியாது. 53 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சுழற்சியில் தலைவர் பதவிக்கு வர முடியும்.

இந்த நிலையில் ராணியின் விருப்பம் குறித்து, லண்டன் வின்ட்சார் கோட்டையில் மூடிய அறையில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதித்தனர். இதில் காமன்வெல்த் அமைப்பின் அடுத்த தலைவராக இளவரசர் சார்லஸ்சை ஏற்பது என முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக 53 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில் அவர்கள், “காமன்வெல்த் மற்றும் அதன் மக்களை வென்றெடுப்பதில் ராணியின் பங்கை அங்கீகரிக்கிறோம்” என்று கூறி உள்ளனர். 
Tags:    

Similar News