செய்திகள்

கியூபாவில் முடிவுக்கு வந்தது காஸ்ட்ரோ ஆட்சி - புதிய அதிபராக மிக்கெல் டயாஸ் தேர்வு

Published On 2018-04-20 17:09 GMT   |   Update On 2018-04-20 17:09 GMT
கியூபா அதிபர் பதவியில் இருந்து ரால் காஸ்ட்ரோ விலகியதை அடுத்து, புதிய அதிபராக மிக்கெல் டயாஸ்-கேனல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #MiguelDiazCanel #Cuba

ஹவானா:

கரீபியன் கடலில் அமைந்துள்ள கம்யூனிச நாடான கியூபாவில், 30 ஆண்டுகளாக கியூபா புரட்சியை முன்னெடுத்த பிடல் காஸ்ட்ரோ அதிபராக பதவி வகித்தார். பின்னர் உடல் நலம் காரணமாக 2006-ம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்து விலகிய பிடல் காஸ்ட்ரோ, தனது தம்பி ரால் காஸ்ட்ரோவை அதிபராக நியமித்தார்.


முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ


பத்தாண்டுகளாக அதிபர் பதவியிலிருந்த ரால் காஸ்ட்ரோ தனது 87வது வயதில் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க, கியூபாவின் நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. 

இதையடுத்து, பத்தாண்டுகளாக துணை அதிபராக இருந்த தனது ஆதரவாளர் மிக்கெல் டயாஸ்-கேனலை, அதிபர் பதவிக்கு ரால் காஸ்ட்ரோ முன்னிறுத்தினார். அவரை எதிர்த்து எந்த வேட்பாளரும் நிறுத்தப்படவில்லை. எனவே, மிக்கெல் டயாஸ்-கேனல் போட்டியின்றி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கியூபா விடுதலைக்குப் பின் முதல் முறையாக காஸ்ட்ரோ குடும்பத்தைச் சேராத ஒருவர், நாட்டின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #MiguelDiazCanel #Cuba
Tags:    

Similar News