செய்திகள்

வடகொரியா அதிபரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

Published On 2018-03-29 05:26 GMT   |   Update On 2018-03-29 05:26 GMT
வடகொரியா அதிபரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

வடகொரியாவும், தென்கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இதனால் கோபம் அடைந்த வடகொரியா, அமெரிக்காவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த போவதாகவும், அணுகுண்டுகளை வீசப்போவதாகவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மிரட்டி வந்தார்.

அதற்கு பதிலடியாக வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இதன் பிறகு கிம் ஜாங் உன் சற்று இறங்கி வந்தார்.

இதற்கிடையே தென்கொரியா தூது குழு ஒன்று வடகொரியாவுக்கு சென்றது. அவர்கள் ‘கிம் ஜாங் உன்’னை சந்தித்து பேசினார்கள். அப்போது கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபரை சந்திக்க விரும்புவதாக கூறினார்.

இந்த வி‌ஷயத்தை தூது குழுவினர் அமெரிக்க அதிபரிடம் கூறினார்கள். அதை டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் கிம் ஜாங் உன் சீனா வந்துள்ளார். அவர் சீன அதிபர் ஷி ஜின்பின்னை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்காவுடன் மோதல் போக்கை கைவிடும்படி அவர் வட கொரிய அதிபரை கேட்டு கொண்டதாக தெரிகிறது.

இதுபற்றிய தகவலை சீன அதிபர் அமெரிக்க அதிபருக்கு தெரிவித்தார். அதை தொடர்ந்து டொனால்டு டிரம்ப் டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.



அதில், வடகொரிய அதிபரை சந்திப்பதற்காக நான் ஆவலுடன் காத்து இருக்கிறேன். கிம் ஜாங் உன் தன்னிடம் பேசியது பற்றி சீன அதிபர் எனக்கு தகவல் அனுப்பினார். அந்த பேச்சு நல்ல விதமாக முடிந்துள்ளது. அதை வரவேற்கிறேன்.

அதே நேரத்தில் துரதிருஷ்டவசமாக வடகொரியா மீதான தடைகள் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News