செய்திகள்

சிரியா உள்நாட்டுப்போர்: கிழக்கு கூட்டாவில் இருந்து 7 ஆயிரம் கிளர்ச்சியாளர்கள் வெளியேறினர்

Published On 2018-03-27 18:44 GMT   |   Update On 2018-03-27 18:44 GMT
சிரியாவில் நிகழும் உள்நாட்டுப்போர் காரணமாக கிளர்ச்சியாளர்கள், அவர்களது குடும்பத்தினர், அப்பாவி பொதுமக்கள் என 7 ஆயிரம் பேர் 100 பஸ்களில் அங்கு இருந்து வெளியேறினர்.
பெய்ரூட்:

சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் நகரையொட்டிய கிழக்குகூட்டா பகுதியை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்டெடுப்பதற்காக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகள் தீவிரம் காட்டி வந்தன. அதிபர் ஆதரவு படைகளுக்கு ரஷிய படை உதவிக்கரம் நீட்டியது.

கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த இந்த தாக்குதல்களில் குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் கூட்டம், கூட்டமாக கொன்று குவிக்கப்பட்டனர். இதனால் அதிபர் படைகள் தொடர்ந்து முன்னேறி வந்தன.

இந்த நிலையில் கிழக்கு கூட்டாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்து வந்த முக்கிய பகுதியை மீட்ட ரஷியா படையினர், அதை சிரியா அதிபர் படையினரிடம் ஒப்படைக்க முன் வந்தனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

அதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் இருந்து கிளர்ச்சியாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை முதல் அவர்கள் வெளியேறத் தொடங்கினர்.

இந்த நிலையில், நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு கிளர்ச்சியாளர்கள், அவர்களது குடும்பத்தினர், அப்பாவி பொதுமக்கள் என 7 ஆயிரம் பேர் 100 பஸ்களில் அங்கு இருந்து வெளியேறினர். அவர்கள் அனைவரும் துருக்கி எல்லையையொட்டி அமைந்து உள்ள இத்லிப் நோக்கி சென்றனர்.

இது கிளர்ச்சியாளர்களுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்து உள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதுபற்றி ரஷிய செய்தி நிறுவனமான டாஸ் கூறும்போது, “6 ஆயிரத்து 800 கிளர்ச்சியாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் கிழக்கு கூட்டாவில் இருந்து வெளியேறி இத்லிப் சென்றனர்” என்று தெரிவித்தது.

இதற்கிடையே சிரியா டி.வி. ஒன்று, ஆர்பின் நகரில் கிளர்ச்சியாளர்களால் சிறை பிடித்து வைக்கப்பட்டு இருந்த 28 பேரை ராணுவம் விடுவித்ததாக கூறியது. 
Tags:    

Similar News