செய்திகள்

புதிய பிரதமரை தேர்வு செய்ய சிறிசேனா கட்சி முயற்சி - இலங்கையில் குழப்பம் நீடிப்பு

Published On 2018-02-15 05:40 GMT   |   Update On 2018-02-15 05:40 GMT
பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்வு செய்ய சிறிசேனா கட்சி முயற்சி செய்து வருவதால் இலங்கையில் குழப்பம் நீடித்து வருகிறது.
கொழும்பு:

இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் சுதந்திரா கட்சி, பிரதமர் ரனில்விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றின் கூட்டணியுடன் ஆட்சி நடந்து வருகிறது.

சமீபத்தில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிபர் ராஜபக்சே இலங்கை மக்கள் முன்னணி என்ற புதிய கட்சியை தொடங்கி போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 341 கவுன்சில் பதவிகளில் 239 இடங்களை ராஜபக்சே கட்சி பிடித்தது. ரனில்விக்ரமசிங்கே கட்சிக்கு 41 இடங்களும், சிறிசேனா கட்சிக்கு 10 இடங்களும் கிடைத்தன.

தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் ஆளும்கட்சி கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த தோல்விக்கு ரனில்விக்ரமசிங்கே தான் காரணம் என்று சிறிசேனா கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனவே அவர் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் ரனில்விக்ரமசிங்கே பதவியை ராஜினாமா செய்ய முன்வரவில்லை.

இந்த பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வுகாண இரு கட்சிகளும் முயற்சி செய்தன. நேற்று முன்தினமும், நேற்றும் 2 தடவை கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். ஆனாலும் உரிய முடிவுகள் எட்டப்படவில்லை. தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ரனில்விக்ரமசிங்கே கட்சியினர் சிறிசேனா கூட்டணியில் இருந்து விலகி தனியாக ஆட்சியை தொடர்வதற்கு முயற்சித்து வருகின்றனர். இலங்கை பாராளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225. அதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 உறுப்பினர்கள் உள்ளன. சிறிசேனா கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கு 95 இடங்கள் உள்ளன. தமிழ்தேசிய கட்சிக்கு 16 இடங்கள் இருக்கின்றன. மீதி 8 இடங்கள் மற்ற கட்சிகளிடம் இருக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 இடங்கள் இருப்பதால் மெஜாரிட்டிக்கு இன்னும் 7 இடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. மற்ற சிறு கட்சிகளிடமிருந்து இந்த ஆதரவை பெற்று ஆட்சியை தொடரலாம் என்று பிரதமர் ரனில்விக்ரமசிங்கே விரும்புகிறார். எனவே அதற்கான முயற்சியில் அவர் இறங்கி உள்ளார்.

அதே நேரத்தில் சிறிசேனா கட்சியினர் ஐக்கிய தேசிய கட்சியை வெளியேற்றிவிட்டு தாங்களே ஆட்சி அமைக்கலாம் என்ற திட்டத்தில் உள்ளனர். அவரிடம் 95 உறுப்பினர்கள் இருப்பதால் மெஜாரிட்டிக்கு தேவையான மீதி உறுப்பினர்களை பெற்றுவிடலாம் என்று அவர்களும் நினைக்கின்றனர். எனவே அதற்கான முயற்சியில் அவர்களும் இறங்கி இருக்கிறார்கள்.

இதற்கிடையே சிறிசேனா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும், மந்திரிகளுமான மகிந்தா அமரவீரா, சுசில்பிரேம ஜெயந்தா ஆகியோர் அதிபர் சிறிசேனாவிற்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திரா கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கும்போது, 2 ஆண்டுக்கு மட்டுமே நாம் ஒப்பந்தம் செய்து கொண்டோம். அந்த 2 ஆண்டுகாலம் முடிந்துவிட்டது.

அதன்பிறகும், ரனில்விக்ரமசிங்கேவை பதவியில் நீடித்து வைத்திருக்கிறோம். இது தேவையற்றது. பிரதமரின் நடவடிக்கைகள் காரணமாகவும், அவரது ஆட்சியில் நடந்த பல ஊழல்கள் காரணமாகவும் இப்போது உள்ளாட்சி தேர்தலில் பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது. இந்த தோல்விக்கு பிரதமர் தான் பொறுப்பேற்க வேண்டும்.

தேசிய வங்கி பத்திர ஊழலில் பிரதமருக்கு நேரடி தொடர்பு உள்ளது. எனவே அவர் பதவியில் இனி நீடிக்க கூடாது. நமது கட்சியே புதிய ஆட்சியை தனியாக அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

இதை அதிபர் சிறிசேனா ஏற்றுக்கொண்டதாகவும், அவரது கட்சியே புதிய அரசை அமைக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அவ்வாறு சிறிசேனா கட்சி புதிய அரசு அமைப்பதாக இருந்தால் இலங்கை போக்குவரத்து மந்திரி நிமல்சிறிபாலா டிசில்வாவை பிரதமராக்க சிறிசேனா திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த சமரச முயற்சிகள் வெற்றி பெறாததால் இலங்கையில் பாராளுமன்ற ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அதிபர் சிறிசேனா மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டதால் அவர் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. பிரதமர் ரனில்விக்ரமசிங்கே பதவிக்கு மட்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. #tamilnews

Tags:    

Similar News