செய்திகள்

ரோஹிங்கியா பிரச்சனையை ஆங் சாங் சூகி புரிந்து கொள்ள வில்லை - பிரிட்டன் வெளியுறவு மந்திரி கவலை

Published On 2018-02-13 07:41 GMT   |   Update On 2018-02-13 08:14 GMT
மியான்மர் சென்ற பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் அந்நாட்டு அரசு ஆலோசகர் ஆங் சாங் சூகியை சந்தித்து ரோஹிங்கியா பிரச்சனை குறித்து பேசினார்.
யாங்கூன்:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு பல உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் அரசு முறைப்பயணமாக மியான்மர் சென்றுள்ளார். நேற்று மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சாங் சூகியை சந்தித்து பேசினார். இருவரும் ரோஹிங்கியா பிரச்சனை குறித்து பேசினர்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜான்சன், 'ரோஹிங்கியா மக்கள் நிலைமை மிகவும் மோசமாக  உள்ளது. உண்மையில் ரோஹிங்கியா பிரச்சனை குறித்து  சூகி முழுவதும் புரிந்து கொண்டாரா என தெரியவில்லை. அவர் ஹெலிகாப்டரில் சென்று நாங்கள் பார்த்ததை பார்க்க வேண்டும். அவருடைய தலைமையில் நம்பிக்கை உள்ளது. ஆனால் இங்கு நடக்கும் பிரச்சனையை பார்க்கும் போது மிகுந்த கவலையளிக்கிறது.

மேலும் இது போன்ற கொடூரத்தை நான் என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. நூற்றுக்கணக்கான கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சரியான தலைமை இல்லை. ஐக்கிய நாடுகள் நிறுவனத்துடன் இணைந்து மக்களை தங்கள் சொந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும்' என கூறினார்.

மியான்மருக்கு செல்வதற்கு முன் ஜான்சன் வங்காளதேசத்திற்கு சென்றார். அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து பேசினார். மேலும் காக்ஸ் பசார் பகுதியில் உள்ள அகதிகள் முகாமிற்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்தார். #tamilnews

Tags:    

Similar News