செய்திகள்

தென்கொரியா உடனான பேச்சு ரத்து - வடகொரியா தலைவர் திடீர் நடவடிக்கை

Published On 2018-01-20 19:56 GMT   |   Update On 2018-01-20 19:56 GMT
தென்கொரியா உடனான பேச்சு வார்த்தையை சற்றும் எதிர்பாராத வகையில் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் ரத்து செய்து விட்டார் என நேற்று தகவல் வெளியாகியுள்ளது. #NorthKorea #SouthKorea
சியோல்:

தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள வடகொரியா விருப்பம் தெரிவித்தது. இதையடுத்து நேரடி பேச்சு வார்த்தை நடத்த அந்த நாட்டுக்கு தென்கொரியா அழைப்பு விடுத்தது.

அதன் பேரில் கடந்த 9-ந் தேதி இரு நாட்டு எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள பான்முன்ஜோம் கிராமத்தில் நடந்தது.

வடகொரியாவின் சார்பில் ரி சன் ஜிவோன் தலைமையிலான குழுவும், தென்கொரியா தரப்பில் சோ மயூங் கியோன் தலைமையிலான குழுவும் பேச்சு நடத்தின.

இந்த பேச்சு வார்த்தையின்போது, குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தனது குழுவை அனுப்பி வைக்க வடகொரியா ஒப்புக்கொண்டது.

இதையடுத்து இரு நாடுகளும் அந்த போட்டியின்போது ஒரே கொடியின் கீழ் அணிவகுக்கவும், ஐஸ் ஹாக்கி போட்டியில் இரு நாடுகளின் ஒன்றிணைந்த அணியை அமைத்து போட்டியில் பங்கேற்கச்செய்வது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தும், ஒரு இணக்கமான சூழல் உருவாகும், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணியும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் உருவானது.

ஆனால் இந்த நிலையில் வார இறுதியில் நடக்கவிருந்த பேச்சு வார்த்தையை சற்றும் எதிர்பாராத வகையில் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் ரத்து செய்து விட்டார் என நேற்று தகவல் வெளியானது. இதற்கான உறுதியான காரணம் என்ன என்று தெரியவில்லை என யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறி உள்ளது. 
Tags:    

Similar News