செய்திகள்
விமானத்தில் போப் ஆண்டவர் பிரான்சிசுடன் தம்பதி கார்லோஸ் சியூப்பார்டி-பயுலா போடெஸ்ட்.

விமானத்தில் பறந்த படி போப் ஆண்டவர் முன்னிலையில் ஊழியர்கள் திருமணம்

Published On 2018-01-19 06:08 GMT   |   Update On 2018-01-19 06:08 GMT
தென் அமெரிக்க நாடான சிலியில் விமானத்தில் பறந்த படி போப் ஆண்டவர் பிரான்சிஸ் முன்னிலையில் விமான ஊழியர்கள் திருமணம் நடைபெற்றது. அப்போது தம்பதிகள் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
சாண்டியாகோ:

போப் ஆண்டவர் பிரான்சிஸ் தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று 3-வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தலைநகர் சாண்டியாகோவில் இருந்து ஐகியுகியூ நகருக்கு தனது விமானத்தில் சென்றார்.

சுமார் 2½ மணி நேரம் விமான பயணம் நடைபெற்றது. அப்போது போப் ஆண்டவரின் விமானத்தில் பணிபுரியும் கார்லோஸ், சியூப்பார்டி (41), பயுலா போடெஸ்ட் (39) ஜோடியின் திருமணம் நடைபெற்றது.

சிலி நாட்டை சேர்ந்த இவர்களுக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் திருமணம் நடைபெறவில்லை.


இந்த திருமணம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது தம்பதிகள் மோதிரம் மாற்றிக் கொண்டனர். திருமணம் நடந்த போது விமானம் 36 ஆயிரம் அடி (11 ஆயிரம் மீட்டர்) உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

திருமணம் முடிந்ததும் தம்பதிக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் கையெழுத்துடன் கூடிய திருமண சான்றிதழ் வழங்கப்பட்டது. இத்தம்பதிக்கு ஏற்கனவே திருமணம் நடந்த போது மத சம்பிரதாயபடி நடத்த முடியவில்லை.

ஏனெனில் அந்நேரம் சிலியில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக தேவாலயம் இடிந்து தரைமட்டமாகி கிடந்தது. எனவே தான் தற்போது போப் ஆண்டவர் முன்னிலையில் மத சம்பிரதாயப்படி திருமணம் நடந்ததாக வாடிகனில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNews
Tags:    

Similar News