செய்திகள்

ராணுவ தளபதி பிபின் ராவத் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் - அணுஆயுத போருக்கு சவால்

Published On 2018-01-14 05:30 GMT   |   Update On 2018-01-14 05:30 GMT
எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும், யார் பலம் வாய்ந்தவர்கள் பார்த்து விடலாம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி கவாஜா ஆசிப் மிரட்டல் விடுத்துள்ளார். #Pakistan #KhawajaAsif

இஸ்லாமாபாத்:

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் கடந்த 12-ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தீவிரவாதிகளை பாகிஸ்தான் கையாளும் முறை தொடர்பாக சமீபத்தில் அதிருப்தி தெரிவித்துள்ள அமெரிக்காவின் எச்சரிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் துடைத்தெறியப்பட வேண்டியவர்கள். பாகிஸ்தான் அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

இந்நிலையில் பிபின் ராவத்தின் இந்த கருத்திற்கு தற்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி கவாஜா ஆசிப் தனது டுவிட்டர் மூலம் பதிலளித்துள்ளார். மேலும் இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டலையும் பாகிஸ்தான் விடுத்துள்ளது. இதுகுறித்து கவாஜா ஆசிப் பதிவுசெய்துள்ள டுவிட்டில் கூறியிருப்பதாவது:-



இந்திய ராணுவ தளபதியின் பேச்சு மிகவும் பொறுப்பற்றது. இது அவரது பதவிக்கு ஏற்றதல்ல. இதன் மூலம் அவர் அணுஆயுத சண்டைக்கு அழைப்பு விடுகிறார். ஒருவேளை அது தான் இந்தியாவின் ஆசை என்றால், அவர்கள் வந்து எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும். யார் பலம் வாய்ந்தவர்கள் என்பது விரைவில் காட்டப்படும் என குறிப்பிட்டுள்ளார்.



அவரைத்தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவு விவகாரத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய ராணுவ தளபதியின் பொறுப்பற்ற, மிரட்டல் தோணியிலான பேச்சு இந்தியாவின் கெட்ட எண்ணத்தை எடுத்துக் காட்டுகிறது. பாகிஸ்தான் தனது தாக்குதல், தடுப்பு திறனை காட்டும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அந்த வகையில் அவர்கள் எங்களை தவறாக எடைபோட வேண்டாம். பாகிஸ்தான், தன்னை காத்துக் கொள்ள முழு திறனுடன் உள்ளது, என குறிப்பிட்டுள்ளார். #Pakistan #KhawajaAsif #tamilnews
Tags:    

Similar News