செய்திகள்

பாகிஸ்தான்: கலவரத்தில் 6 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம் - ராணுவம் வரவழைப்பு

Published On 2017-11-25 18:01 GMT   |   Update On 2017-11-25 18:01 GMT
பாகிஸ்தானில் கலவரங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதையடுத்து நிலைமையை சமாலிப்பதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் சத்திய பிரமாணம் செய்யும்போது அதில் சில வரிகளை மாற்றி பிரமாணம் எடுக்கலாம் என சட்டத்துறை மந்திரி ஜஹித் ஹமீது சமீபத்தில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவர முயன்றார். இதற்கு பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் சில இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஜஹித் ஹமீது ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஜஹித் ஹமீது எதிராக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு செல்லும் பிரதான சாலைகளில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக சில இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் பல லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இதையடுத்து பாகிஸ்தான் போலீஸ் மற்றும் துணை ராணுவம், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தி விரட்டும் நடவடிக்கையை நேற்று முதல் ஆரம்பித்துள்ளது.



இந்த நடவடிக்கையின் போது, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டம் நடைபெற்ற இடம் போர்க்களமானது.

ஆனால் போராட்டக்காரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு டிவி சேனல்களில் அரசியல் தொடர்பான விவாதங்கள்தான் காட்டப்படுகின்றன.

போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையை நேரடியாக ஒளிபரப்புக்கூடாது என்ற உத்தரவை பாகிஸ்தானில் மின்னணு ஊடகங்கள் ஒழுங்கு முறை ஆணையமான 'பெம்ரா' பிறப்பித்துள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.



இந்த போராட்டத்தினால் ஏற்பட்ட கலவரங்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பாகிஸ்தானில் அவசர காலநிலை பிறப்பிக்கப்பட்டதை போன்ற சூழல் உருவாகியுள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதையடுத்து அதை சமாலிப்பதற்காக ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News