செய்திகள்

ஜிம்பாப்வே: அதிபர் முகாபேவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு

Published On 2017-11-19 03:27 GMT   |   Update On 2017-11-19 03:27 GMT
ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக அதிபராக இருந்து வரும் முகாபேவுக்கு எதிராக ராணுவம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு அந்நாட்டு மக்கள் பெருவாரியானோர் ஆதரவளித்துள்ளனர்.
ஹரரே:

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன் நாங்காவாவை முகபே பதவி நீக்கம் செய்தார்.

இதனால், ஆளும் ஷானு - பி.எப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.

அதிபர் முகாபே

இதனையடுத்து, கடந்த 15-ம் தேதி தலைநகர் ஹரரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. அதிகளவிலான ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டனர். ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகின.

அதிபர் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவத்தின் கண்காணிப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அதிபர் முகாபேவுக்கு எதிராக ராணுவம் கிளர்ந்துள்ளதற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். முகாபே வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்தவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிபர் மாளிகைக்கு வெளியே திரண்ட ஆயிரக்கணக்கானோர் முகாபேவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே, அதிபர் முகாபேவை பதவி நீக்கம் செய்வது குறித்து மாகாண ஆளுநர்கள் அவசர கூட்டம் நடத்த உள்ளனர். இதில், முகாபேவுக்கு எதிராக அனைவரும் அணி திரளும் பட்சத்தில் அவர் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News