செய்திகள்

அதிபர் முகபே சிறைபிடிப்பு - ஜிம்பாப்வே நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவம்

Published On 2017-11-15 08:27 GMT   |   Update On 2017-11-15 08:27 GMT
ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980-ம் ஆண்டு முதல் அதிபராக இருக்கும் முகபே மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹரரே:

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன் நாங்காவாவை கடந்த வாரம் முகபே பதவி நீக்கம் செய்தார்.

இதனால், ஆளும் ஷானு - பி.எப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை தலைநகர் ஹரரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. அதிகளவிலான ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, துப்பாக்கி மற்றும் பீரங்கிகளால் சுடும் சப்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அந்நாட்டு அரசு ஊடக தலைமையகத்தையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.



பாராளுமன்றம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களையும் படிப்படியாக ராணுவம் முற்றுகையிட்டு, தன்வசம் கொண்டு வந்தது. அதிபர் மாளிகையை எப்போது வேண்டுமானாலும், ராணுவம் முற்றுகையிடலாம் என்ற நிலை நீடித்து வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘அரசை கைப்பற்றும் நோக்கமில்லை’ என ராணுவ செய்தி தொடர்பாளர் முன்னர் கூறியிருந்தார். குற்றவாளிகளை மட்டுமே ராணுவம் குறிவைத்துள்ளது எனவும் தெரிவித்திருந்தார். அதிபர் முகபே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவத்தின் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, ‘ரத்தம் சிந்தாமல் நடைபெற்ற மாற்றம்’ என ஆளும்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் குழப்பமான சூழ்நிலை நிலவுவதால் தங்களது நாட்டவர்கள் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படி அமெரிக்க மற்றும் பிரிட்டன் தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
Tags:    

Similar News