செய்திகள்

அமெரிக்காவில் ஹோபோக்கன் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சீக்கியர்

Published On 2017-11-08 19:23 GMT   |   Update On 2017-11-08 19:23 GMT
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தின் ஹோபோக்கன் நகர மேயராக சீக்கியரான ரவீந்தர் பல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க்:

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தின் ஹோபோக்கன் நகர மேயராக சீக்கியரான ரவீந்தர் பல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நியூஜெர்சி மாகாணத்தில் சீக்கியர் ஒருவர் மேயர் பதவிக்கு தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறை. அதுவும் இதுவரை மேயர் பதவி வகித்து வந்த டான்ஜிம்மரால் இவர் முன்மொழியப்பட்டவர் ஆவார்.

பலத்த போட்டிக்கு மத்தியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவீந்தர் பல்லா, அங்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பொருளாதார உளவியல் பட்டமும், லண்டன் பொருளாதார பள்ளியில் படித்து எம்.எஸ்.சி. பொது நிர்வாக பட்டமும், லூசியானாவில் டுலானே சட்டப்பள்ளியில் படித்து ஜூரிஸ் டாக்டர் பட்டமும் பெற்றார். நியூஜெர்சி, நியூயார்க் மாகாணங்களில் உள்ள கோர்ட்டுகளில் ஜூரியாக (நடுவராக) இருந்து வந்துள்ளார்.

7 ஆண்டுகளுக்கு மேலாக நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும் வகித்துள்ளார். சமீபத்தில் அவரது காரில் யாரோ சமூக விரோதிகள் அவரை பயங்கரவாதி என சித்தரிக்கும் வாசகங்களை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் ஹோபோக்கன் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவீந்தர் பல்லா, “நன்றி ஹோபோக்கன். உங்கள் மேயராக பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். நீங்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி” என ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் குறிப்பிட்டார். 
Tags:    

Similar News