செய்திகள்

இந்தியாவில் இருந்து லிபியா ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு மாத்திரைகள் கடத்தல்: இத்தாலியில் பறிமுதல்

Published On 2017-11-04 07:08 GMT   |   Update On 2017-11-04 07:08 GMT
இந்தியாவில் இருந்து லிபியா ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு வலி நிவாரண மாத்திரைகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை இத்தாலியில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரோம்:

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஈராக் மொசூல் நகரை தங்கள் பிடியில் இருந்து இழந்தனர். சமீபத்தில் சிரியாவில் ரக்சாவும் இவர்களின் கையில் இருந்து நழுவியது.

இதனால் அவர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். தங்களின் பிடியில் உள்ள மற்ற பகுதிகளை தக்க வைத்துக் கொள்ள தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். அதற்கு நிதி தேவைப்படுகிறது. எனவே வலி நிவாரண மாத்திரைகளை கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இத்தாலியில் உள்ள ஜியோயியா தயூரோ துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கப்பலை போலீசார் திடீர் சோதனையிட்டனர். அதில் ‘டிரமோடல்’ என்ற வலி நிவாரண மாத்திரைகள் பெட்டி பெட்டியாக இருந்தன.

இவை லிபியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்காக இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டவையாகும். இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.2 கோடியே 40 லட்சம் ஆகும்.

இவை ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் பட்சத்தில் அதன் மதிப்பு ரூ.370 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ‘டிரமோடல்’ என்ற வலி நிவாரண மாத்திரைகள் மிக சக்திவாய்ந்தது. இவை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தயாரிக்கப்படுகிறது. விலையும் மிக குறைவு.

இந்த மாத்திரைகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர். அவை உடல் சோர்வு, அசதி போன்றவற்றை நீக்க கூடியது. நைஜீரியாவில் உள்ள போகோஹாரம் தீவிரவாதிகளும் இம்மாத்திரையை அதிக அளவில் உபயோகிக்கின்றனர்.

Tags:    

Similar News