செய்திகள்

ஆங் சான் சூ கீயின் பெயரை நீக்க வேண்டும்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை

Published On 2017-10-21 12:11 GMT   |   Update On 2017-10-21 12:11 GMT
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இளநிலை பொது அறையில் உள்ள ஆங் சான் சூ கீயின் பெயரை நீக்க வேண்டும் என அங்கு பயிலும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லண்டன்:

மியான்மரின் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ கி. இவர் 1967-ல் லண்டனில் உள்ள செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்குட்பட்ட இந்த கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். 
மியான்மரில் நடைபெற்ற ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியதற்காக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அதற்காக 1991-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த 1999 முதல் அந்த கல்லூரியில் அவரது புகைப்படம் இடம்பிடித்தது. நோபல் பரிசு பெற்ற இவரை கடந்த 2012-ம் ஆண்டில் செயின்ட் ஹூக்ஸ் கல்லூரி தனது கல்லூரிக்கு அழைத்து கவுரவித்தது. 

கடந்த செப்டம்பர் மாதம் கல்லூரியின் நுழைவு வாயிலில் இடம் பிடித்திருந்த ஆங் சான் சூ கியின் படத்தை பல்கலைக்கழக நிர்வாகம் அகற்றியது. மியான்மர் நாட்டில் அவதிப்பட்டு வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் சூகி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அக்கல்லூரியின் இளநிலை பொது அறையில் இடம்பிடித்திருக்கும் சூகியின் பெயரை அகற்ற வேண்டுமென அக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

“சொந்த நாட்டில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் மீறல்களை கண்டிக்காமல் அமைதியாக இருக்கும் ஆங் சான் சூ கியை கண்டிக்க வேண்டும். அமைதியாக இருப்பதனால், அவர் முன்னர் பரப்பிய உயரிய கோட்பாடுகளையும் கொள்கைகளையும் எதிர்த்து நிற்கிறார்,” என அம்மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags:    

Similar News