செய்திகள்

ஆப்கானிஸ்தான்: போலீஸ் தலைமை அலுவலகத்தில் தலிபான்கள் தாக்குதல் - பலி 45 ஆக உயர்வு

Published On 2017-10-17 12:04 GMT   |   Update On 2017-10-17 12:05 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டில் போலீஸ் தலைமை அலுவலகம் வளாகத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
காபுல்:

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகள் மற்றும் போலீசாரை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் உள்ளது. இவர்களை ஒடுக்குவதற்கு அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்தியா மாகாண தலைநகரான கார்டிசில் உள்ள போலீஸ் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் பயிற்சி கட்டிடத்தை குறிவைத்து தீவிரவாதிகள் இன்று காலை தாக்குதல் நடத்தினர். முதலில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், காரில் வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்று பயிற்சி மையம் காம்பவுண்டு சுவர் அருகே வெடிக்கச் செய்து, உள்ளே நுழைவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளான்.

பின்னர் அந்த வழியாக தீவிரவாதிகள் பயிற்சி மையத்தினுள் புகுந்து துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரமாக இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.  

இந்த தாக்குதல் மற்றும் துப்பாக்கி சண்டையில் 15 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. பிற்பகல் நிலவரப்படி இந்த தாக்குதல் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதாகவும், 200-க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Tags:    

Similar News