செய்திகள்

ரோகிங்கியா அகதிகள் வந்த படகு கவிழ்ந்தது: 8 பேர் உயிரிழப்பு

Published On 2017-10-16 08:56 GMT   |   Update On 2017-10-16 08:56 GMT
வங்காளதேசம் அருகே ஆற்றில் படகு கவிழ்ந்து ரோகிங்கியா அகதிகள் 8 பேர் உயிரிழந்தனர். ஆற்று நீரில் மூழ்கிய சிலரைக் காணவில்லை.
டாக்கா:

மியான்மரில் ராணுவ ஒடுக்குமுறை மற்றும் வன்முறை காரணமாக ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான ரோகிங்கியாக்கள் வங்காளதேசத்திற்கு செல்கின்றனர். இவர்கள் மியான்மரையும் வங்காளதேசத்தையும் பிரிக்கும் நப் ஆற்றில் பாதுகாப்பற்ற படகு பயணம் மேற்கொள்ளும்போது சில சமயங்களில் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

அவ்வகையில், இன்று மியான்மரில் இருந்து தப்பி வந்த ரோகிங்கியாக்கள் படகில் வங்காளதேசத்தை நோக்கி வந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகில் சுமார் 50 பேர் பயணம் செய்ததாகவும், அதில் குழந்தைகள் உள்பட 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 21 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 6 வாரங்களில் மட்டும் சுமார் 200 ரோகிங்கியாக்கள் இதுபோன்று படகு விபத்தில் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News