செய்திகள்

இந்திய கல்விமுறைக்கு உதவிய நன்கொடையாளருக்கு உயரிய விருது

Published On 2017-06-23 12:05 GMT   |   Update On 2017-06-23 12:05 GMT
அமெரிக்காவில் இந்திய பள்ளிகளில் சீர்திருத்தத்துக்கு உதவிவரும் விப்ரோ குழுமங்களின் தலைவர் நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜி-க்கு அமெரிக்காவில் ‘சிறந்த நன்கொடையாளர்’ என்ற உயரிய விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
வாஷிங்டன்:

உலகளாவிய அளவில் மக்களுக்கு அதிக பலன்களை தரும் பெரிய தர்ம காரியங்களுக்காக பெருமளவிலான நிதி அளித்துவரும் தனிநபர்களை கண்டறிந்து அவர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையில் விருது வழங்குவதற்காக கடந்த 2001-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கார்னியேஜ் கார்ப்பரேஷன் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பின் சார்பில் மிகவும் சிறப்புக்குரிய நன்கொடைகளையும், சமூக சேவைகளையும் செய்துவரும் நபர்கள் இரண்டாண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பிரபல நன்கொடையாளரான ஆண்ட்ரு கார்னியேஜ் என்பவரின் நினைவாக ‘கார்னியேஜ் பதக்கம்’ அளிக்கப்படுவது வழக்கம்.


இந்த வகையில் 2017-ம் ஆண்டுக்கான இந்த விருதுக்கு மொத்தம் ஒன்பதுபேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இந்தியாவின் விப்ரோ குழுமங்களின் அதிபரும் அந்நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியுமான அசிம் பிரேம்ஜி(70) இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கம்ப்யூட்டர் மென்பொருள், வன்பொருள் வர்த்தகம் உள்பட பல்வேறு வகையில் தனது தொழில்துறையில் வெற்றிகொடியை நாட்டிய பின்னர்,  இந்தியப் பள்ளிகளில் உயர் பிரிவு மாணவர்கள் - தாழ்ந்த வகுப்பை சேர்ந்த மாணவர்கள் என்ற ஏற்றத்தாழ்வை நீக்கி, சீரமைத்து பள்ளி கல்வி முறையை நவீனப்படுத்தும் நோக்கத்தில் ‘அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை’ என்ற அமைப்பு ஒன்றை இவர் ஏற்படுத்தினார்.


இந்த அறக்கட்டளையின் மூலம் சுமார் 3 லட்சம் பள்ளிகளில் கல்வி முறையை மேம்படுத்தி, சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர, கடந்த 2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் மூலம் பலர் பட்டதாரியாகி, பல்வேறு நிறுவனங்களில் தற்போது பணியாற்றி வருகின்றனர்.

இந்த மகத்தான சேவைக்காக இந்த ஆண்டுக்கான ‘கார்னியேஜ் பதக்கம்’ விருதுக்கு அசிம் பிரேம்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகளாவிய அளவில்  நன்கொடையாளர்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான ‘கார்னியேஜ் பதக்கம்’ அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் விழாவில் அசிம் பிரேம்ஜிக்கு வழங்கப்படவுள்ளது.
Tags:    

Similar News